பவார் பவர்!

பவார் பவர்!
Published on

க டந்த சில நாட்களாக நாட்டின் கவனத்தையே மும்பை ஈர்த்திருந்தது.  கடைசியில் பாஜகவினர் பிடுங்கியவை எல்லாமே தேவையில்லாத ஆணி என்று சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் நிரூபித்துவிட்டனர்.

பாஜகவும் சிவசேனாவும் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இரு கட்சிகளுக்கும் இணைந்து ஆட்சி அளிக்கும் அளவிலான எண்ணிக்கையை மக்கள் தந்தனர். ஆனால் ஒருவரை இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதிக எண்ணிக்கை அளிக்கப்படவில்லை. பாஜக 105; சிவசேனா 56. ஒருவர் இன்றி இன்னொருவர் ஆளமுடியாது என்ற நிலை!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக்கொண்டனர். சிவசேனா பெரிதாக  ஆட்சியில் பங்குகோரி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பாஜக தேவேந்திர பட்னவிஸை முதல்வராக ஆக்கி இருந்தது.

இந்த தேர்தலில் சிவசேனா அப்படி விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு அடங்கிய கூட்டாளியாகப் போகவிரும்பவில்லை! முன்பே பேசியிருந்தாலும் தேர்தல் முடிவுக்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தனர். முடிவுகள் வந்ததும் ஆட்சியில் சம பங்கு. அதாவது இரண்டரை ஆண்டுகள் நீங்கள் முதலமைச்சர்; அடுத்த இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதலமைச்சராக இருப்போம் என்றது சிவசேனா.

இந்த இடத்தில்தான் தனிமனிதர்களின் ஈகோக்கள் வேலை செய்கின்றன. அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே ஆகிய தலைவர்களின் ஈகோக்கள்! மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக, சிவசேனாவை மதிக்கவில்லை. டெல்லியில் இருந்து யாரேனும் தன்மையாகப் பேசுவார்கள் என்று பார்த்தனர் சிவசேனாவினர். இல்லை! உள்ளூர் தலைமையுடன் பேச தாக்கரே தயாராக இல்லை! வீம்பு வளர்ந்தது.

உள்ளே நுழைந்தார் மராட்டிய பெருந்தலைவர் சரத் பவார். ஐம்பது ஆண்டுகால அரசியல் வரலாறு அவருடையது. 1978&ல் அவருக்கு 38 வயது. எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், காங்கிரஸ்(எஸ்), காங்கிரஸ் (ஐ) கூட்டணி அரசைக் கவிழ்த்து அந்த மாநிலத்தின் இளம் முதலமைச்சராக இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்தவர். இந்த தேர்தலுக்கு முன்பாக அவரது கட்சியை பாஜகவினர் சின்னா பின்னம் ஆக்கி இருந்தனர். முக்கியமான ஆட்களை எல்லாம் தங்கள் பக்கம் கூட்டிக்கொண்டு போய்விட்டனர். தேசியவாத காங்கிரஸ் காலி என்று நினைத்தபோது சரத்பவார் மீது அமலாக்கத்துறை ஊழல் வழக்கு, நோட்டீஸ் அனுப்புவோம் என்றது.

பவார்,''நான் வருகிறேன்' என்றார்.  தன் 79 வயதிலும் கொட்டும் மழையில் பேசி தேர்தல் பிரசாரம் செய்தார். தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றன.

சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் முட்டிக் கொண்ட நிலையில் பவார் கவனமாக காய்களை நகர்த்தினார். சிவசேனா பவார், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தயார் ஆனதும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு கொண்டார். சிவசேனாவின் கொள்கைகள் காங்கிரஸுக்கு நேர் எதிரானவை எனவே சோனியா காந்திமுடிவெடுக்க  சற்று   இழுத்தார். ஆலோசனைகள் போய்க்கொண்டிருந்தன. பவாரும் சோனியா காந்தியும் மெதுவாக அடிகளை எடுத்து வைத்தனர்.

எமர்ஜென்சி சமயத்தில் அபு ஆபிரஹாம் வரைந்த கேலிச்சித்திரம்
எமர்ஜென்சி சமயத்தில் அபு ஆபிரஹாம் வரைந்த கேலிச்சித்திரம்

பாஜக தலைமை அவசரப்பட்டது. சிவசேனாவுக்குள் கீறலைக் கூட உருவாக்கமுடியவில்லை! சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் வலையில் சிக்கினார்! அவர் மீது 24,000 கோடி ரூபாய் அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. பாஜகவுக்கு தன் ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்,எல்.ஏக்களுடன் ஆதரவு தருவதாக அவர் அணி மாறினார்.

இதெல்லாம் ஒரே இரவில் காதும் காதும் வைத்ததுபோல் நடந்தன. விடிகாலை 5.47க்கு ஆளுநர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. எட்டுமணிக்குள் பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்!

பவார் புன்னகைத்துக்கொண்டார்! வெளியே போனது அஜித் பவாரின் சொந்த முடிவு. அவர் தனக்கு ஆதரவாக பல எம்.ஏல்.ஏக்கள் உள்ளதாக ஆளுநரிடம் கொடுத்தது இங்கே கூட்டத்துக்கு வந்தவர்களின் வருகைப்பட்டியலில் போட்ட கையெழுத்து என்றார்! சிவசேனாவும் களமிறங்கியது,. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பத்திரமாக வைக்கப்பட்டனர்! அஜித் பவார் மட்டுமே பாஜக தரப்பில் எஞ்சினார். உச்ச
நீதிமன்ற உத்தரவும் கிடுக்கிப் பிடியாக மறுநாளே பலத்தை நிரூபிக்கவேண்டும் என சொல்லவே, முதலில் அஜித்பவார், சில மணி நேர இடைவெளியில் பட்னாவிஸ் பதவி விலகி, பரபரப்பு குறைந்தது!

பாஜகவின் இந்த அவசரம் காங்கிரஸுக்கு சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதை நியாயப்படுத்தும் ஓர் அழகான காரணத்தை அளித்தது. இந்த மூன்று கட்சிகளும் குறைந்த பட்ச செயல்திட்டம் என்ற ஒன்றை முன்வைத்து ஆட்சி அமைத்துவிட்டன. உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆகிவிட்டார்!

எதிர்கொள்ள முடியாத வலிமை கொண்டிருந்த பாஜகவை அதன் கூட்டணிக் கட்சியை இழுத்துப் பிடித்துக் கொண்டுவந்த பவார், தன்னை நிஜமான சாணக்கியனாக நிரூபித்தார்!

''எங்க கட்சியிலிருந்து சில தலைவர்களை நீங்கள் தேர்தலுக்கு முன்னால் கவர்ந்துகொண்டு போயிருக்கலாம். ஆனால் எங்கள் தலைவர் உங்கள்  கூட்டணிக் கட்சியையே தூக்கிகிட்டு வந்துட்டார், பாருங்க'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பாஜகவினரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!

குறிப்பு : இந்தியா டுடே டிவியின் நெறியாளர் ராகுல் கண்வல், 'எதிர்க்கட்சிகளே ரொம்ப குஷியாகாதீங்க! கர்நாடகாவில் காங்கிரஸ்& ம.த.ஜ., இப்படித்தான் ஆட்சி அமைத்தார்கள்! ஆனால் பிறகு கவிழ்ந்துடுச்சு! பாஜக இப்போது காயம்பட்ட புலி! ஜாக்கிரதை' என்று ட்விட்டரில் சொல்லி இருக்கிறார்!

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com